1. உங்கள் குழந்தைக்கு சுவாரஸ ...

உங்கள் குழந்தைக்கு சுவாரஸ்யமாக கதை சொல்லும் டிப்ஸ்

3 to 7 years

Radha Shri

6.1M பார்வை

6 years ago

உங்கள் குழந்தைக்கு சுவாரஸ்யமாக கதை சொல்லும் டிப்ஸ்
ஆன்லைன் கல்வி

குழந்தைகளுக்கு கதைகள் கேட்கவும் பிடிக்கும், சொல்லவும் பிடிக்கும். இதை என் குழந்தையின் மூலம் அறிந்து கொண்டேன். கதைகள் மூலமாக அவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றல் அபாரமாக வளர்கிறது என்றே சொல்லலாம். இன்றைக்கு நிலைமையே மாறிவிட்டது. குழந்தைகளுக்கு கதைகள் சொல்ல நாம் கார்டூன் படங்களை போட்டுவிட்டு நம் வேலையை பார்க்க சென்று விடுகின்றோம். என்னோட பொண்ணு கார்டூனில் அதிகமாக கதைகள் பார்க்க அனுமதிப்பில்லை. ஆனாலும் சிறிது நேரம் பார்க்க விட்டுவிட்டு அதே கதையை அவளுக்கு பிடித்த விதத்தில் நானும், என் கணவரும் சொல்வோம்.

Advertisement - Continue Reading Below

கதைசொல்லலின் முக்கியத்துவம்

More Similar Blogs

    இன்று வரை அவளுக்கு கதைகள் சொல்லி தூங்க வைப்பதை ஒரு வழக்கமாக ஆக்கிவிட்டோம். இது உடனே நடந்துவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பிடித்த கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கி சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினோம். கார்டூன் பார்த்த குழந்தைகளுக்கு நாம் கதை சொல்லும் போது ஆரம்பத்தில் சுவாரஸ்யம் இருக்காது. குழந்தைகள் கேட்கவில்லையே என்று நாமும் விட்டுவிடக்கூடாது. அதன் பிறகு அவர்கள் டிவி மற்றும் மொபைல் இவற்றில் மட்டும் தான் கதை கேட்கவும், பார்க்கவும் செய்வார்கள். ஆரம்பத்தில் முயற்சி செய்தால் அவர்களுக்குள் ஆர்வம் தானாக வந்துவிடும்.

     

    கதைகள் எப்படி கூற வேண்டும் மற்றும் கதைகள் மூலம் அவர்கள் என்னென்ன கற்கிறார்கள் என்பது தொடர்பாக ஒரு அரசு பள்ளி ஆசிரியை என்னிடம் பகிர்ந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    கதைகள் ஏன் கூற வேண்டும்? குழந்தைக்கான கதைசொல்லலின் நன்மைகள்

    குழந்தைகள் தன்னை சுற்றி இருக்கிற நிகழ்வுகளை கதைகளாக சொல்ல ஆரம்பிக்கிறார்கள். கதைகள் சொல்லும் குழந்தைகள் தாங்கள் சொல்ல நினைப்பதை சரியாக தெரிவிப்பதற்கு கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுடைய மொழித் திறன், கற்பனை ஆற்றல், படைப்பாற்றல், முடிவெடுக்கும் திறன், படைப்பாற்றல் ஆகிய முக்கியமான திறன்கள் வளர கதைகள் உதவுகின்றது. இதில் முக்கியமாக அவர்களை சொல்வதை எந்தளவுக்கு நாம் அங்கீகரிக்கிறோமோ அதை பொருத்து அவர்கள் படைப்பாளிகளாவார்கள்.

    • குழந்தைகள் கதைகள் கேட்பது மூலம் ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் கோர்வையாக எப்படி சொல்வது என்கிற நுணுக்கங்களை தெரிந்து கொள்கிறார்கள்.
    • நமக்கு தோன்றுகிற எண்ணங்களை, பொது விஷயங்களை அறிவுரையாக கூறுவதை விட கதைகளாக அவர்கள் மொழியில் கூறும் போது அவர்களுக்கு அந்த விஷயம் தெளிவாக போய் சேர்கிறது.
    • கதையில் வரும் கதாபாத்திரங்களை எப்போழுதும் தன்னுடன் ஒப்பிட்டு பார்ப்பதால், அவர்கள் செய்யும் தவறுகளையும் கதைகள் மூலம் சுட்டிக் காட்டலாம்.
    • மேலும் அவர்கள் தன்னை தானே வள்ர்த்து கொள்வதற்கும் கதை உதவுகிறது. அதனால் கதைக்குள் குழந்தைகளுக்கு பிடித்த, இணக்கமாக கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும்.
    • கதைகள் கேட்கும் குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள். இது அவர்களுடைய அறிவு வளர்ச்சியை விரிவுப்படுத்த உதவுகின்றது.
    • இப்படி தொடர்ந்து கதை சொல்லும் போது அவர்களும் கதைகளை கோர்வையாகவும், தைரியமாகவும் கதைகளை சொல்வார்கள். குழந்தைகள் தன்னை ஒரு படைப்பாளியாக உணர ஆரம்பிப்பார்கள்.

     

    சுவாரஸ்யமாக கதை சொல்வதற்கான டிப்ஸ்

    கதை சொல்லும் உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன, அவை கதையை சுவாரஸ்யமானதாகவும், கல்வி ரீதியாகவும், உங்கள் குழந்தைக்கான கற்றல் நிறைந்ததாகவும் இருக்கும்

    1. கற்பனையை தூண்ட கூடிய விஷயங்களை கதைகளில் கொண்டு வரலாம்
    2. புதிர் கதைகள். ஏதாவது ஒரு புதிரை சொல்லி கதையை முடிக்கலாம். அந்த முடிவை பற்றின ஒரு தேடல் குழந்தைகளுக்குள் வரும்.
    3. ஆர்வத்தை தூண்டக் கூடிய விடுகதை கதைகள்.விடுகதையாக முடித்துவிட்டு, அதற்கான விடையை, முடிவை குழந்தைகளிடம் கூற சொல்வது. இந்த மாதிரி கதைகள் நிறைய விதங்களில் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
    4. நல்ல பண்புகளை, பழக்கவழக்கங்களை குழந்தைகளிடம் அறிவுரையாக சொல்வதை விட கதைகள் மூலம் புரிய வைக்கலாம். குளிக்க வேண்டும், கை கழுவ வேண்டும் சுத்தமாக இருக்க வேண்டும் போன்ற பழக்கவழக்கங்களை சொல்லும் கதைகளை சொல்லலாம்.
    5. கல்லா ? நீரா ? போன்ற அறிவியல் கதைகள். கஷ்டமான பாடங்களையும் கதையாக விளக்கி கூறலாம். மகிழ்ச்சியாகவும் கவனிப்பார்கள், அதே நேரத்தில் அந்த பாடமும்  அவர்களுக்கு புரியும்.
    6. கலந்துரையாடல் கதைகள். விழிப்புணர்வான, முக்கியமாக சொல்ல நினைக்கிற விஷயங்களை குழந்தைகளுக்கு கலந்துரையாடல் கதைகள் மூலம் சொல்லலாம். உதாரணம் கரப்பான் பூச்சிக்கு ஒரு பாடம் – வலுவானவர்கள் நம்மை தொந்தரவு செய்யும் போது கூட்டமாக சேர்ந்து போராடுவது. நம்மை விட வலுவானவர்களை கண்டு பயப்பாடமல் ஒரு கூட்டமாக எப்படி எதிர்ப்பது என்பதை கூறுகிறது இந்த கதை.
    7. நல்ல குணங்களை கதைகள் மூலம் எடுத்துக்காட்டலாம். உதாரணத்திற்கு பெருமை மட்டுமே பேசிக் கொண்டிப்பது எப்படி தவறாக முடிகிறது என்பது போன்ற குணங்களை சுட்டிக்காட்டும் கதைகள்.
    8. குழந்தைகளுக்கு பாடலாக கதையை சொல்லும் போது அதை மகிழ்ச்சியாக கேட்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கான ஒரு நடையில் சொல்வார்கள்.
    9. கதைகளில் பயமுறுத்தும், அச்சுறுத்தும் விஷயங்களை குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இரவு தூங்க செல்லும் முன் கூறும் கதைகள் மென்மையாக, மகிழ்ச்சியாக, பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டும்.
    10. கதைகள் சொல்லும் போது குழந்தைகள் கண்டிப்பாக குறுக்கிட்டு கதை மாற்றுவார்கள். அவர்களை அனுமதியுங்கள், கலந்துரையாட ஊக்கப்படுத்துங்கள். தோழமையாக அணுகவும். இதனால் அவர்களுக்கு கதை மீது நாட்டம் அதிகமாவதோடு, தாங்களும் கதைகள் சொல்லலாம் என்ற தன்னம்பிக்கை வளரும்.

     

    நம் அன்றாட வாழ்வியலோடு அதிகமான தொடர்புடையது கதை. குழந்தைகள் சொல்லும் கதையில் வெறும் கற்பனை மட்டும் வருவதில்லை. அவர்களுடைய விருப்பு, வெறுப்பு, பயம், சந்தோஷம், ஆர்வம், கனவு, குணம், உணர்வு என குழந்தைகள் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கதைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். கதைகள் நம்மையும் குழந்தையையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைகிறது. அதனால் எல்லா குழந்தைளும் கதைகள் கேட்கவும், சொல்லவும் செய்வார்கள். கார்டூன் கதைகளை குறைத்து நம் பாட்டி தாத்தா போல் அரவணைத்து கதைகள் கூறுவோம். குழந்தைகளின் கற்பனை ஆற்றலை வளர்ப்போம்.

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)