1. குழந்தைகள் அடம் பிடிக்கி ...

குழந்தைகள் அடம் பிடிக்கிறார்களா? கையாளும் 6 வழிகள்

3 to 7 years

Radha Shri

2.2M பார்வை

2 years ago

 குழந்தைகள் அடம் பிடிக்கிறார்களா? கையாளும் 6 வழிகள்
ஆக்ரோஷம்
அடம் & பிடிவாதம்

 என் மகளுக்கு 3.5 வயதாகிறது.  சமீப காலமாக, அதாவது எப்போது அவள் மொபைல் பார்க்க ஆரம்பித்தாளோ அப்போதிலிருந்து இந்த அக்ரஸ்ஸிவ் நடத்தையை அவளிடம் பார்க்கிறேன். முக்கியமாக, அவள் மொபைல் போன் பார்க்கும் போது நடுவில் வாங்கினாலோ, அல்லது நான் போன் கொடுக்க மாட்டே என்று சொன்னாலோ, இந்த நடத்தை தலைக்காட்டும். அதே போல் ப்ரீ- ஸ்கூலிலிருந்து வரும் போது இதை நான் சந்திந்திருக்கிறேன். பிறகு பசி மற்றும் தூக்கம், ஓய்வு இந்த மூன்றுமே தேவைகேற்ப கிடைக்கவில்லை என்றாலும் இந்த நடத்தை வெளிப்படும். ஆனால் அவள் வெளிச்சூழலில் விளையாடும் போதோ அல்லது மற்ற ஆக்டிவிட்டியில் ஈடுபட்டிருக்கும் போதோ, மற்ற குழந்தைகளோடு திருப்தியாக விளையாடி விட்டு வந்தாலோ இந்த நடத்தை கொஞ்சம் கூட அவளிடம் இருக்காது. இதிலிருந்து தான் அவளை கையளும் வழிகளை நான் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன்.

பெற்றோர்கள் நாம் சரியாக கையாளும் போது இந்த நடத்தையை நிச்சயமாக அவர்களிடம் மாற்ற முடியும். இது அவர்களுடைய ஆளுமை கிடையாது. ஏதோ ஒரு காரணத்தால் அழுத்தம் அதிகமாகி இப்படி நடந்து கொள்கிறார்கள். முக்கியமாக அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் சாப்பாடு, தூக்கம், ஓய்வு, விளையாட்டு நேரம், டிவி டைம், மற்ற குழந்தைகளோடு விளையாடுவது என ஒவ்வொரு நாளையும் நாம் அவர்களுக்காக திட்டமிட வேண்டியிருக்கிறது. மேலும் அவர்களை கூர்ந்து கவனிப்பது மூலம் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும் நம்மால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதற்கு கொஞ்சம் பொறுமையும், அவகாசமும் இருந்தால் போதும். நான் பின்பற்றிய சில வழிமுறைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஆக்ரோஷத்தை தூண்டும் காரணங்களை கண்டுபிடியுங்கள்

More Similar Blogs

    ஒவ்வொரு குழந்தைகளும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது. உங்கள் குழந்தை எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள், முக்கியமாக எப்போது நடந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான சில யோசனைகள்..

    1. குழந்தைகளை பொறுத்த வரையில் பசி எடுக்கும் போது சாப்பிடுவதும், சோர்வாக இருக்கும் போது ஓய்வெடுக்க வேண்டியதும் அவசியமான ஒன்று. இதில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லையெனில் அதை கூட அக்ரஸ்ஸிவ்வாக வெளிப்படுத்துவார்கள்.
    2.  எந்த இடத்தில், சூழலில் அல்லது எந்த நேரத்தில் அவர்கள் தொடர்ச்சியாக அமைதியை இழக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு, டே -கேர் அனுப்புவதோ, நீண்ட நேரம் பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருப்பதோ கூட அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி கோபத்தை வரவழைக்கலாம்.
    3. முதன் முதலில் ப்ரீ-ஸ்கூல் போகிற குழந்தைகள் அழுத்தமாகவோ விரக்தியாகவோ உணர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. அறிமுகமில்லாத இடம், புதிய முகங்கள் , பெற்றோர்களை விட்டு நீண்ட நேரம் பிரிந்திருப்பது போன்ற விஷயங்கள் அவர்களுக்குள் அழுத்தத்தை உண்டாக்கலாம்.
    4. முக்கியமாக குழந்தைகள் செய்யும் சிறு சிறு தொந்தரவுகளுக்காக அவர்களை அடித்தால் நிச்சயமாக அவர்களின் ஆக்ரோஷ நடத்தை அதிகரிக்கும். அதே போல் வீட்டில் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்வது, வன்முறையான சூழல் இருந்தால் இந்த நடத்தையே அவர்களின் ஆளுமையாக மாறிவிடும்.
    5. வீட்டில் மற்றவர்கள் யாராவது கோபத்தை, எரிச்சலை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினால் குழந்தைகளும் அதே மாதிரி தான் வெளிப்படுத்தக் கற்றுக் கொள்வார்கள். உதாரணத்திற்கு கோபம் வரும் போது பெரியவர்கள் பொருட்களை தூக்கி எறிவது, அல்லது மற்றவர்களிடம் சத்தம் போட்டு கத்துவது, அடிப்பது என தங்களின் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறார்களோ இதையே தான் குழந்தைகளும் அச்சு மாறாமல் பின்பற்றுவார்கள்.
    6. மொபைல் போன், சாக்லெட், விளையாட்டுப் பொருள் என தனக்கு பிடித்ததை கேட்டு அது கிடைக்கவில்லை என்றாலும் சில குழந்தைகள் ஆக்ரோஷம் அடைவார்கள். ஏன்னென்றால் போன முறை இதே போல் அழுது கேட்ட போது வாங்கி கொடுத்திருப்போம். அதனால் குழந்தைகள் அதே உத்தியைக் கையாண்டால் கிடைத்துவிடும் என்பதற்காக செய்கிறார்கள்.
    7. உடம்பில் ஏதாவது பிரச்சனைகள் அல்லது பயத்தை உணரும் போது அதை தங்களால் சரியாக தெரிவிக்க இயலாது போது, மற்ரும் அவர்களின் வலியைப் பெரியவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் போனாலும் வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டு.
    8. சரியான வார்த்தைகள் கிடைக்காமல் சொல்ல தெரியாமல் இருப்பார்கள். எப்படி குழந்தை தனக்கு பேச தெரியவில்லை என்ற போது அழுது வெளிப்படுத்துகிறதோ அதே போல் வார்த்தைகளை பயன்படுத்த தெரியவில்லை என்றாலும் அவர்களின் உணர்ச்சிகளை கோபத்தின் மூலம் வெளிப்படுத்தி காட்டுகிறார்கள்.

    இது போன்ற நடத்தையுள்ள குழந்தையை எப்படி அணுகினால் தீர்வு காணலாம் என்பதை கூறுகிறார் டாக்டர்.சுமதி சந்திரசேகரன், குழந்தை உளவியல் ஆலோசகர்.

    பொதுவாக குழந்தைகள் ஆரம்பப்  பருவத்தில் தங்களது தேவை உடனடியாக திருப்தியடைய வேண்டும் என்று விரும்புவார்கள். இதை உளவியலில் immediate gratification என்று சொல்வார்கள். அதாவது பால் கேட்டால், பசித்தால், சிறு நீர் கழிக்க வேண்டும் என்று நினைத்தால், டிவி பார்க்க வேண்டும், சாக்லெட் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் உடனே அவர்களுடைய ஆசைகள், தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி செயல்படுத்தவில்லையெனில் எதிர்ப்பை வெளிக்காட்டுவார்கள்.ஒரு விஷயம் அடம் பிடித்து கிடைத்துவிட்டால் அவர்கள் எப்போதும் அதே செயலை பின்பற்றி காரியம் சாதிக்க நினைப்பார்கள். அடம் பிடித்து எதையும் சாதிக்கப் பழக்காதீர்கள்.

    எல்லா நடத்தைகளையும் குழந்தைகள் தங்களது சூழலிலிருந்து தான் 80% கற்றுக் கொண்டு செய்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் தங்களது உணர்வை எப்படி வெளிப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே குழந்தைகள் கோபத்தையோ, அசொளகரியத்தையோ, ஏமாற்றத்தையோ வெளிப்படுத்துகிறார்கள். அப்படித்தான் அவர்களின் மூளையில் பதிவாகியிருக்கிறது. இதுவே வளர்த்த பிறகு அவர்களின் ஆட்டிடியூடாக உருவெடுக்கும். பெற்றோர்களால் இந்த நடத்தையை சரி செய்ய முடியாவிட்டால், பிள்ளைகள் வளர்ந்தால் சரியாகிவிடும் என்று விடாதீர்கள். தொடர்ந்து இந்த மாதிரி நடத்தை அதிகமாக காணப்பட்டாலோ அதாவது தங்களையே காயப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு போனால் நிச்சயமாக மன நல ஆசோசகரின் ஆலோசனையை நாடுவதே சிறந்தது.

    குழந்தையின் ஆக்ரோஷ நடத்தையை சமாளிக்கு 6 வழிகள்

    1. அடிப்பது தீர்வில்லை -  குழந்தைகள் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் போது, அதாவது பொருட்களை தூக்கி எறியும் போது, பெரியவர்களை தாக்கும் போது அவர்களை அடிக்கவோ, கத்தி மிரட்டவோ, தண்டனைகள் கொடுப்பதையோ தவிர்த்து விடுங்கள். குழந்தையிடம் உன்னுடைய எதிர்ப்பை நீ காட்டுகிறாய், ஆனால் இது சரியான முறையல்ல என்பதை பொறுமையாக, பல தடவை கூறுங்கள்.
    2. பெற்றோர்களே சிறந்த எடுத்துக்காட்டு - பெரியர்வர்கள் நம்முடைய எரிச்சலையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் நேர்மறையாக வெளிப்படுத்துவதன் மூலம் குழந்தைகள் அதே போல் தங்களது தேவையை, எதிர்பார்ப்பை வெளிப்படுத்த கற்றுக் கொள்வார்கள்.
    3. உங்கள் நிலையில் உறுதியாக இருங்கள் - ஒவ்வொரு முறையும் குழந்தை ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் போதும் நேர்மறையாக கண்டியுங்கள். இதன் மூலம் குழந்தை தன்னுடைய நடவடிக்கை தவறு என்பதையும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். விதிகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். ஏன்னென்றால் நேற்று எதுவும் சொல்லவில்லை, ஆனால் இன்று அதே விஷயத்தை செய்தால் ஏன் திட்டுகிறார்கள் என்று குழந்தைகள் குழம்பிவிடுவார்கள்.
    4. டிவி பார்க்கும் நேரத்தை குறைத்துவிடுங்கள் - டிவி, மொபைல், லேப்டாப் போன்ற சாதங்களோடு அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் எளிதாக ஏமாற்றம் அடைகிறார்கள். அதனால் அவர்களுக்குள் அழுத்தம் அதிகரித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றது. மற்றும் அவர்கள் டிவி மொபைல் பார்க்கும் போது திடீரென துண்டித்து வர வற்புறுத்த வேண்டாம். கொஞ்சம் அவகாசம் கொடுத்து பிறகு வரச்சொல்லுங்கள். மேலும் அதிக நேரம் வெளிச்சூழலில் விளையாடும் குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் அழுத்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற முடியும்.
    5. குழந்தைகளின் உணர்வுகளை பற்றி அவர்களோடு பேசுங்கள் - உங்கள் குழந்தை அமைதியாக இருக்கும் போது மென்மையாகவும், தயவாகவும் அவர்களிடம் நிலைமையைப் பற்றி கலந்துரையாடுகள். எந்த விஷயம் அவர்களை அதிகமாக கோபப்படுத்துகிறது என அவர்களை பேச ஊக்கப்படுத்துங்கள். சில நேரங்களில் கோபம் கொள்வது தவறில்லை, ஆனால் ஒருவரை தள்ளிவிட்டோ, அடித்தோ, கிள்ளியோ, கடித்தோ, மிதித்தோ உன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவது சரியான முறையல்ல என்பதை தெரியப்படுத்தலாம். அதே போல் வெளிப்படுத்துவதற்கான 5 வழிகளை பற்றி கற்றுக் கொடுங்கள்.
    6. நேர்மறையான, அன்பான நடத்தையை பாராட்டுங்கள் - குழந்தைகள் எப்போதெல்லாம் பாஸ்டிவ்வாக, அன்பாக, மென்மையாக நடந்து கொள்கிறார்களோ அப்போதெல்லாம் பாராட்டிப் பேசுங்கள். குழந்தைகளுக்கு பாராட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் எதற்கு அதிகமான பாராட்டுகள் கிடைக்கிறோதோ அதை தொடர்ந்து செய்ய விரும்புவார்கள். கூடவே அவர்கள் ஏன் பாராட்டப்படுகிறார்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

    குழந்தையின் பார்வையில் இந்த உலகத்தின் அர்த்தம் வேறு. நிச்சயமாக இந்த நடத்தையை மாற்ற முடியும். அதற்கு பிள்ளைகள் எப்போதும் தயராக தான் இருக்கிறார்கள். உத்திகளையும், பொறுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது நாமே…

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)