0 - 1 வயது குழந்தைகளை கு ...
கோடை காலத்திலிருந்து தப்பித்துவிட்டோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மழை, குளிர் காலம் என அடுத்தடுத்து வரிசையில் வந்துவிட்டது. ஏற்கனவே குளிர் கால பராமரிப்புகளை பற்றி தாய்மார்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனாலும் குளிர் காலத்தில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பது என்பது தாய்மார்களுக்கு இருக்கும் பெரிய சவால் தான். காய்ச்சல், ஜலதோஷப் பிரச்சனைகள், சரும வறட்சி, ஜீரணக்கோளாறு என மற்ற காலத்தைக் காட்டிலும் குளிர் காலத்தில் குழந்தைகளை பத்திரமாகப் பராமரிக்கக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
குளிர் காலத்தில் குழந்தைகள் உண்ணும் உணவு, தாயின் நலம், அணியும் உடை, சுகாதாரம், சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள், பயணம் ஆகியவற்றில் அதிக அக்கறை எடுக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய் உட்கொள்கிற உணவின் காரணமாகவும் குழந்தைக்கு நோய் தாக்கலாம். மற்றவர்களிடமிருந்து பரவுவதன் மூலம் பாதிப்புகள் வரலாம். இதற்காக எல்லா நேரங்களிலும் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைக்க முடியாது. நம்முடைய அச்சம் குழந்தைகளுக்குத் தொந்தரவாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இங்கே குளிர்காலத்தில் வரும் பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், இனிமையான காலமாக மாற்றவும் இளம் தாய்மார்களுக்கான சில எளிமையான டிப்ஸ் இதோ…
வெதுவெதுப்பான சூழல் தேவை - குளிர் காலத்தில் வீடும், குழந்தையின் அறையும் வெதுவெதுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அறையில் குளிர் காற்று அதிகம் வரும் இடங்களை அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஊரின் தட்பவெட்ப நிலைக்கு ரூம் ஹீட்டர் அவசியப்படாது என்று நினைக்கிறேன். வெதுவெதுப்பை அளிக்கும் சொளகரியமான ஆடைகளை அணிவதன் மூலம் குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும்.
குளிர்கால நோய் தாக்குதல் - குளிர் காலத்தில் குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை பெரும்பாலும் தாக்கக்கூடிய நோய்கள் வைரஸ் காய்ச்சல், சளி, தும்மல், இருமல். அதிலும் மற்றவர்களிடமிருந்து எளிதாக நோய் தாக்கும் என்பதால் நோயாளிகளிடம் குழந்தைகளை நெருக்கமாகப் பழகவிடாதீர்கள்.
மேலும் டயப்பர் மாற்றிய பிறகு, வெளியில் சென்று வந்த பிறகு கைகளை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் நோய் தாக்கும் கிருமிகள் பரவுவதை தடுக்கலாம். அதே போல் குழந்தைக்கு மறக்காமல் பருவகால தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.
புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களிடம் குழந்தையை நெருக்கமாக இருக்க விடாதீர்கள். ஏனென்றால் புகைப்பிடிப்பவர்கள் மூலம் சளிப்பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.
இன்னொரு முக்கியமான விஷயம் குழந்தைக்கு முதல் ஆறு மாதம்வரை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க முடியும். அதனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குக் குளிர் கால நோய் தாக்குதல் குறைவாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
குளிர் கால குளியல் - குழந்தையின் குளியல் நேரம் ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் மேல் இருக்க வேண்டாம். முக்கியமாக டவல் போன்று குளியலுக்கு தேவையான அனைத்தையும் முன்னதாகவே தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரின் சூட்டை உங்கள் முழங்கை வைத்து சோதித்து பாருங்கள்.
குளிப்பாட்டும் பொழுது கழுத்துப்பகுதி, தோலின் மடிப்புகள் போன்ற இடங்களில் பால் மற்றும் அழுக்குகள் படிந்திருக்கும். தண்ணீர் ஊற்றி துடைத்தாலே போதுமானது. மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் இடங்களில் சோப்பையோ, வாசனை வைப்ஸையோ பயன்படுத்த வேண்டாம். தண்ணீர் ஊற்றி சுத்தமாகக் கழுவினாலே போதும்.
குளித்தப்பின் குழந்தைக்கு உடை மாற்றும் அறையில் ஃபேன், ஏசியை அனைத்து விடுங்கள். வெறும் உடம்போடு அதிக நேரம் வைக்கமால் உடனே உடை மாற்றி விடுங்கள்.
ஆயில் மசாஜ் செய்யலாமா? - நிச்சயமாக செய்யலாம். இயற்கையான ஆயிலை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. நான் தேங்காய் எண்ணெய்யை பரிந்துரைப்பேன். என் மகளுக்கு எப்போதும் தேங்காய் எண்ணெய் மசாஜ் தான் செய்வேன். தோலின் நிறம் கறுப்பாகும் என்பார்கள். அப்படியொன்றும் நடக்கவில்லை. ஆனால் அவளுடைய தோல் வரட்சியாகாமல் இருந்தது. எல்லா காலங்களிலுமே குழந்தகளுக்கு மசாஜ் செய்தால் மகிழ்ச்சியாக உணர்வார்கள். அதுமட்டுமில்லாமல் ரத்த ஓட்டம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆனால் மசாஜ் செய்வதற்கு முன் நம்முடைய கைகளை தேய்த்து சிறிது சூடாக்கி குழந்தையின் உடலில் தேய்க்க வேண்டும். ஏன்னென்றால் நாம் தொடுவதன் மூலம் அவர்கள் குளிர்ச்சியை உணரலாம். தேவையென்றால் ஆயிலை மிதமாக சூடாக்கி மசாஜ் செய்யலாம். வெதுவெதுப்பாக இருக்கும் இடத்தில் மசாஜ் செய்யுங்கள். அதே போல் மசாஜ் செய்வதற்கான ஏற்ற நேரத்தையும் தேர்ந்தெடுப்பது அவசியம்.
சருமப் பாதுகாப்பு - குழந்தைகளின் தோல் மிகவும் சென்சிட்டிவ்வானது என்பதால் குளிர்காலத்தில் அவர்களின் சருமம் எளிதாக வறட்சியடையும். அவர்களின் தோலில் ஈரப்பத்தத்தை தக்க வைத்துக் கொள்ள குளிப்பாட்டிய பின்பு பேபி மாய்ச்சுரைசர், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் பயன்படுத்தலாம். அதேப் போல் குளிப்பாட்டுவதற்கு முன்பு, எண்ணெயால் மசாஜ் செய்யலாம்.
பிறந்த குழந்தையாக இருந்தால் உடம்பில் பெரிதாக அழுக்குகள் இருக்காது. மைல்ட் கிளன்சரை கொஞ்சமாக பயன்படுத்தலாம். 8 அல்லது 10 மாதக் குழந்தையாக இருந்தால் மைல்ட் பாடி வாஷ் போதும். சோப்பு, லோஷன், ஷாம்பூ, கிரீம், பவுடர் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பது குளிர் காலத்தில் சரும வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்தினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, குளிர் காலத்தில் ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் தாயின் பாலும், உடல் சூடும் குழந்தையை இதமாக உணர வைக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்
தாய்மார்கள் ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிச்சியான உணவுகளை தவிர்க்கலாம். மற்றும் தாய்க்கு ஜீரணக் கோளாறு இருந்தால் குழந்தையையும் அது பாதிக்கும். பழச்சாறுகள் குளிர்ச்சி என்பார்கள். ஆனால் இக்காலத்தில் பழங்கள், காய்கறிகள், சூப்ஸ் மூலம் உடல் வறட்சியை தடுக்கலாம். ஆதலால், இக்காலத்தில் இளம் தாய்மார்கள் உணவிலும், நலனிலும் அதிக அக்கறை தேவை.
இந்த விஷயத்தில் ஆன்லைன் சாப்பிங்கில் இருக்கும் எக்கச்சக்க கலக்ஷன்ஸ் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். இங்குள்ள தட்பவெப்பத்திற்கு எந்நேரமும் ஸ்வட்டர், கையுறை, சாக்ஸ், தொப்பி ஆகியவை அணிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
சில நேரங்களில் ஆடைகளால் அதீத வெப்பமாகி குழந்தைக்கு வேர்க்க ஆரம்பிக்கலாம். மூச்சுத்திணறல் ஏற்படலாம், சூட்டு கொப்பளம் கூட வரலாம். அதனால் அறைகளின் வெப்பநிலை மற்றும் குழந்தையின் உடல்தன்மைக்கேற்ப துணிகளை தேர்வு செய்வதே சிறந்தது.
சில குழந்தைகளுக்குக் கம்பளி துணி அசொளகரியத்தை கொடுக்கும். அதனால் அவர்களுக்கு லேயர்டு பருத்தி ஆடைகள் அல்லது flannel போன்ற மென்மையான துணி ரகங்களை தேர்வு செய்யலாம். இரவு நேரங்களில் மற்றும் பயணத்தின் போது மட்டும் கையுறைகள், தொப்பி மற்றும் காலணிகளை பயப்படுத்தலாம். குளிர் காலத்தில் குழந்தைகள் வசதியான ஆடைகள் இருந்தால் மட்டுமே நிம்மதியாக தூங்குவார்கள்.
குளிர் காலத்தில் குழந்தைகள் வெளியிடத்தில் சாப்பிடுவதால் ஒவ்வாமைப் பிரச்சனைகள் ஏற்படலாம். குளிர் காலத்தில் எளிதாக செரிக்கக் கூடிய உணவு வகைகளை தேர்வு செய்யலாம். முக்கியமாக குழந்தைகள் மெனுவில் சூப்ஸ் இருக்க வேண்டும். காய்கறி சூப், மூலிகை சூப் மற்றும் பூண்டு, ஜீரகம், மிளகு என இயற்கையான வழிகளிலும் குளிர் கால நோய்களை எதிர்கொள்ளலாம்.
குளிர் காலம் நோய்களுக்கான காலம் மட்டுமில்லை. இக்காலத்தில் குடும்பத்தோடு மகிழ்சியாக கழிக்க வேண்டிய விஷயங்கலும் இருக்கின்றது. குழந்தைகளின் பராபரிப்பில் சரியான வீட்டு வைத்தியம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அச்சப்படாமல் குளிர் காலத்தை எதிர்கொள்ளலாம். வீட்டில் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்கி குழந்தையின் முதல் குளிர் காலத்தை இனிமையாக மாற்றுங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)