1. கருத்தரிக்க உடல் மற்றும் ...

கருத்தரிக்க உடல் மற்றும் மனரீதியாக தயாராகும் வழிகள்

Pregnancy

Radha Shri

2.3M பார்வை

3 years ago

கருத்தரிக்க  உடல் மற்றும் மனரீதியாக தயாராகும் வழிகள்
ஹார்மோன் மாற்றங்கள்
வாரா வாரம் கர்ப்பத்தின் நிலை

தாய்மையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான வலிமை தேவைப்படுகிறது. நம்முடைய அம்மா, பாட்டி காலம் போல் இப்போது சூழல் இல்லை. கருத்தரிப்பது முதல் பிரசவம் வரை பல்வேறு பிரச்சனைகளை இந்த கால பெண்கள் சந்தித்து கொண்டிருக்கிறார்கள். கர்ப்பம் தாமதமாக வயது, உடல் ஆரோக்கியம், மனநிலை, குடும்ப சூழல், வேலை, நிதி என ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். வயது அதிகரிக்கும் போது நம் உடலின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. சிலருக்கு சுகமான பிரசவ காலமாக அமைந்துவிடுகிறது, சிலருக்கு பிரசவ காலம் முழுவதும் ஏதாவது சிக்கல் இருந்து கொண்டே இருக்கின்றது. 

தாய்மை அடைவதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு, 20 வயதிற்கு மேல் நம் உடல் எப்படி  மாற்றம் அடைகிறது, மனரீதியாக தாய்மையை எப்படி எதிர்கொள்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், அன்பான குடும்ப சூழல் என கர்ப்பம் காலம் இனிமையாகவும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் இந்த அம்சங்களெல்லாம் அவசியமாகின்றது. இந்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

More Similar Blogs

    உங்கள் உடல் 20 வயது – 24 வயதில் எப்படி இருக்கும்

    இந்த காலகட்டங்களில் உடல் சீராக இருக்கும். மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் அதிகம் வராது. கரு உருவாவதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். இந்த வயது வரம்பிற்குள் உட்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 % கருத்தரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கர்ப்ப காலங்களில் உயர் ரத்த அழுத்தமும், கர்ப்பகால நீரிழிவு பிரச்சனைகளும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வருவதை காட்டிலும் 50 % வரும் வாய்ப்புகள் 20 - 24 வயதுள்ளவர்களுக்கு வருவது குறைவு.

    பெரும்பாலும் இந்த வயதில் இருப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காலம் அவகாசம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு  தங்களுடைய வெளித்தோற்றத்தை பற்றி கவலை கொள்வார்கள். இந்த வயதில் பெண்கள் திருமணம், வேலை இதற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட தாய்மை அடைவதற்கு குறைவாகவே கொடுக்கிறார்கள்.

    இந்த காலங்களில் கருச்சிதைவு ஆவதற்கு வெறும் 9.5 % வாய்ப்புகளே உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஒப்பீட்டளவில் இந்த காலகட்டங்களில் கருமுட்டைகள் வளமையாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் டவுண் சிண்ட்ரோம் எனப்படும் கிரோமோசோம் குறைபாட்டால்  ஏற்படும் பிரச்சனைகள் வருவது மிக குறைவு. மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.

    வயது 25 – 34

    இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியும் செய்தால் பிரசவத்தை எளிமையாக எதிர்கொள்ளலாம். மேலும் இதனால் பிரசவத்திற்கு பின்னும்  உடலை பழைய மாதிரி திரும்ப கொண்டு வர முடியும். ஆனால் 30 வயதிற்கு பிறகு கருமுட்டைகளின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய  ஆரம்பிக்கும். உடலில் படிபடியாகவே இதன் மாற்றங்கள் நடைபெறும். குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படும் போது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

     35 வயது 

    34 வயது காலகட்டத்தில் கருச்சிதைவுக்கான வாய்ப்பு 10 % ஆக உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கையாளவதற்கான பக்குவம் இருக்கும். தாய்மையை சிறிது அனுபவத்தோடு எதிர்கொள்வீர்கள். 30 வயது மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு 20-24 வயது உடையவர்களிவிட இரண்டு மடங்கு அதிகம் என்கிறார்கள்.   30 வயதிற்கு மேல்  பிரசவத்தின்போது கருச்சிதைவு ஏற்பட 11.7 % வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. இந்த வயது பெண்களுக்கு பிறக்கும் 952 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சின்றோமால் பாதிப்படைகிறது. பிரசவத்தின்போதும் குழந்தை வளர்ப்பிலும் மனதளவில் தெளிவுடன் செயல்படுவார்கள்.

    35 வயதிற்கு மேல்

    இந்த காலகட்டத்தில் கருமுட்டைகளின் சக்தி பெருமளவு குறைந்துவிடும். உடலிலும் சக்தி இழக்கின்றனர். மேலும் 10% -20% வரை உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக வயிற்றிலிருக்கும் கருவின் மீது அழுத்தும் ஏற்பட்டு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் கருவை காப்பாற்ற வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. மேலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதும் அதிகமாகிறது. 35 வயதிற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட 18% வாய்ப்புகள் உள்ளது.

    35- 40 வயது

    35-40 வயதுள்ளவர்களுக்கு ஹார்மோன் தூண்டுதலால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இதனால் இரட்டை குழந்தைகள், மூவர் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 35 வயதை கடந்தவர்கள் கருதரிக்கும்போது தாயின் உடல் நலம், கருவின் வளர்ச்சி குறித்த மருத்துவ சோதனை செய்து பார்ப்பது அவசியம். அதன் பிறகு அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தாய் சேய் இருவருக்கும் நல்லது.

    வயது அதிகமாகும் போது வாழ்க்கையில் வசதி, அனுபவம் பெருகுவது போல் உடலில்  மாற்றங்களும், நோய்களும் வரத் தான் செய்யும். சரியான காரணம் இல்லாமல் தாய்மையை தள்ளிப்படுவது எல்லா நேரங்களிலும் நன்மையாக அமையும் என்று சொல்ல முடியாது. எல்லா வயதிலும் உடல் மன ஆரோக்கியம், விழிப்புணர்ச்சி, சரியான ஆலோசனை எல்லா பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிறது.

    உடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு எப்படி தயாராவது

    பெற்றோர்கள், உறவினர்கள் காட்டாயத்திற்காக மட்டும் முடிவு எடுக்காமல், உங்களுடைய மனநிலை, உடல் நலம்  பொறுத்தே கருத்தரிக்க திட்டமிடுங்கள்.

    முதல் பிரசவம் என்பதால் அதை பற்றிய புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. மேலும் தனிக்குடும்பம் பெருகிவிட்ட நிலையில் இந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும். எனவே, கருத்தரிக்கு முன், கர்ப்ப காலங்களில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வரும் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

    கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சந்தேகங்கள், பிரச்சனைகள் பற்றி அறிவுரை, ஆலோசனைகள்  கேட்க அனுபவமிக்க ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்வது கர்ப்ப காலங்களில் வரும் ஐயங்களை சரி செய்ய உதவும்.

    உடல்நலம் மற்றும் ஆரோகியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வளவு நாட்கள்  உணவில் அலட்சியம் இருந்தாலும் கருத்தரிகும் முன் சரியான உணவு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், பெண்கள் தன் சிறு வயதிலிருந்து சத்துள்ள உணவை சாப்பிட்டு வளர்ந்தால் கர்ப்ப காலங்களில் குறைவான  பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    கருத்தரிக்க போவதற்கு முன் பெண்களுக்கு அதைப்பற்றி அதிகமான பயம் இருக்ககூடும். பயத்தை போக்குவதற்கான ஆலோசனை, மன தைரியம் தரக்கூடிய தகவல்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். மேலும் ”தனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக குழந்தை பிறக்கும்” என்று தினமும் எண்ணுவது மூலம் ஆழ்மனதில் பாசிடிவ்வான எண்ணங்கள் வரும். அது பயத்தை போக்க உதவும்.

    வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழல் தேவைப்படும். கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க உதவ வேண்டும். எனவே, அதிக சத்தம், இரைச்சல் இல்லாத, அமைதியான, ஆனந்தமான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். எளிதில் தொற்று மற்றும் நோய் கிருமிகள் பரவாதவாறு வீட்டை சுத்தமாக வைத்திருக்க பழக வேண்டும்.

     பாசிடிவ்வான மனநிலையை தருகிற விஷயங்களான மெல்லிய இசை, புத்தகம், கைவினைப் பொருட்கள் செய்வது குழந்தைக்கு புத்திகூர்மையை அதிகரிக்கும்.

    அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மன அழுத்தத்தை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பக்குவத்தையோ, சூழலையோ அவர்கள் உருவாக்க வேண்டும். அதிக வேலைபளூ இருக்ககூடாது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்ததில் கருவில் வளரும் குழந்தைக்கு எந்த வித பிரச்சச்னையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதற்கு இணையாக உள்ள இன்னொன்று சேமிப்பும். முன்பு போல தற்போதைய நிதி நிலை இல்லை. மருத்துவத்தில் தொட்டதற்கு எல்லாம் பணம் என்ற நிலை உருவாகிவிட்டது. மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலையை பாதுகாக்க மருத்துவ செலவுகள் நிறைய இருக்கும். அதற்கு ஏற்ப பணம் சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.

    தாய்மையை பற்றிய முழு புரிதலோடு தாய்மை அடைந்து, உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுங்கள். சிறந்த மனிதர்களை இந்த உலகத்திற்கு கொடுக்க வழி செய்வோம்.

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)