கைக்குழந்தைகளின் நெஞ்சு சளிக்கான பாட்டி வைத்தியம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரண சளி பிடித்தால் உடனே அதன் அறிகுறிகள் தெரிய வரும். அதற்கான சிகிச்சையை எடுத்து கொண்டால் அதிகபட்சமாக ஏழு நாட்களில் சரி ஆகிவிடும். ஆனால் நெஞ்சு சளி பிடித்தால் முதலில் எந்த அறிகுறியும் வெளியில் தெரிவதில்லை. நாள்படும்போது தான் இருமல், தும்மல், காய்ச்சல், உடல் சோர்வு என ஒவ்வொன்றாக வரும். அதும் குழந்தைகளுக்கு நெஞ்சு சளி கண்டுபிடித்து அதனை சரி செய்வது என்பது கடினமான ஒன்று தான். ஆனாலும் ஆரம்ப அறிகுறிகள் கொண்டு வீட்டு வைத்தியத்தை தொடங்கும் போது குணப்படுத்த முடியும். குழந்தைகளுக்கு எப்படி நெஞ்சு சளி பிடிக்கும், அதனை எவ்வாறு வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கைக்குழந்தைகளுக்கு நெஞ்சு சளி பிடிக்காமல் இருக்க:
பிறந்தது முதல் ஒரு வருடம் வரை குழந்தையை ரொம்ப பக்குவமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லுவாங்க.ஏனென்றால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவு, சளி பிடித்தால் ரொம்ப கஷ்டப்படுவாங்க மூச்சு விட, சாப்பிட, பால் குடிக்க மாட்டாங்க, சரியா தூங்க மாட்டாங்க அழுதுகிட்டே இருப்பாங்க. கை குழந்தைகள் தூங்கும்போது, பால் குடிக்கும் போது நல்ல கவனித்து பார்த்தால் தெரியும் நெஞ்சுல ஒரு சத்தம் வரும் கர்ர். கர்ர்.. என்றும், இருமும் போதே தெரியும் மார்ச்சளி பிடித்திருப்பது என்று. குழந்தைகளுக்கு பொதுவாக மழைக்காலம், குளிர்காலம், கோடைகாலம் என்று எல்லா பருவ காலத்துலயும் சளி பிடிக்கும். அது அதிகம் ஆகாம பார்த்துக் கொள்வது அம்மாவோட கையில் தான் இருக்கிறது.
என்னென்ன காரணங்களுக்காக பச்சிளம் குழந்தைக்கு சளி பிடிக்க வாய்ப்பு உண்டு
- அம்மாவும் குழந்தையும் ஒரே நாளில் தலை குளிப்பதை தவிர்க்கலாம்
- குளிக்கும் போது குழந்தை சோப்பு தண்ணீரை குடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளித்த பிறகு நன்றாக தலையை துடைத்து விட வேண்டும்
- மழைக்காலம், குளிர்காலத்தில் குழந்தைகளை வெளியில் தூக்கி செல்வதை தவிர்க்கலாம். அப்படியே வெளியில் சென்றாலும் கை, கால், தலை உரையால் மூடியிருக்க வேண்டும். தகுந்த பாதுகாப்புடன் தூக்கி செல்ல வேண்டும்.
- தாய்ப்பால் கொடுப்பவர்கள் குளிர்ச்சியானதை ஐஸ்கீரீம், ஐஸ் தண்ணீர், புளித்த மோர்/தயிர், ஐஸ் ஜூஸ் குடித்தால் சளிப் பிடிக்கும்.
- சில குளிர்ச்சியான உணவுகளை பால் குடுக்கும் தாய்மார்கள் தவிர்க்கலாம். எடுத்துக்காட்டாக சளி பிடித்திருக்கும் போது நீர் காய்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை அறிந்து அதனை தவிர்க்கலாம்.
- பால் குடுக்கும் தாய்மார்கள் பருவகால காய்கறி, பழங்களை உண்பது மற்றும் குழந்தைகளுக்கு குடுப்பது பாதுகாப்பானது.
நெஞ்சு சளியை எப்படி வெளியேற்றுவது:
சளி அதிகம் ஆகும் போது நமது உடம்பு அதை வெளியேற்ற முயற்சி செய்யும். இருமும் போதும், தும்மும் போதும் சளி வெளியேறும். சில நேரங்களில் குழந்தைகள் பால் குடிக்கும் போது, சாப்பிடும் போது வாந்தி எடுப்பார்கள் அதில் சளி வெளியேறிவிடும். கை குழந்தைகளுக்கு மலம் மூலமாக சளி வெளியேறும். முழுமையாக வெளியேறும் என்று சொல்ல முடியாது.
நெஞ்சு சளி வெளியேற்ற சில வீட்டு வைத்தியங்கள்
தேங்காய் எண்ணெய்:
சிறிது தேங்காய் எண்ணெயில் ஒரு பல்லு பூண்டு, இரண்டு மிளகு, ஒரு சிட்டிகை ஓமம், போட்டு காய்ச்சி அதில் ஒரு கற்பூரம் போட்டு அந்த எண்ணையை குழந்தையின் மார்பு, இடுப்பின் பக்கவாட்டு, முதுகு, உள்ளங்கால் பகுதியில் தேய்த்து விட நெஞ்சு சளி குணமாகும். ஒரே நாளில் மட்டும் பண்ணாமல் தொடர்ந்து செய்து வர சளி கரையும்.
முருங்கை இலை எண்ணெய்:
இதனை தேவையான போது வீட்டிலயே காய்ச்சி வைத்துக் கொள்ளலாம். முருங்கை இலையின் காம்பு நீக்கி வெறும் இலையை எடுத்து சுத்தம் செய்து அதனை ஒரு கரண்டி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயில் பொரிக்கும் பதத்தில் சூடு செய்து, எண்ணெய் ஆறிய பிறகு மெல்லிய துணியில் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இந்த எண்ணையை குழந்தையின் நெஞ்சு, முதுகு, இடுப்பின் பக்கவாட்டில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தேய்க்கலாம். இந்த எண்ணையை வைத்து குழந்தைக்கு மசாஜும் செய்யலாம். இந்த எண்ணையை குழந்தைக்கு தேய்த்து வர மலத்தில் சளி வெளியேறுவதை பார்க்கலாம். இந்த எண்ணையை பிறந்த ஒரு மாதம் முதற்கொண்டு தேய்க்கலாம். சிறு குழந்தகளுக்கு விரல்களால் தொட்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
பால், மஞ்சள் தூள், மிளகுதூள்:
ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பால் சூடு பண்ணும்போது சிறிது மஞ்சள் தூள் , ஒரு சிட்டிகை மிளகுதூள் சேர்த்து அதில் தேவைக்கேற்ப பணகர்கண்டு அல்லது கொஞ்சமாக நாட்டுசக்கரை சேர்த்து குடுக்கலாம்.
வெற்றிலை, நல்லெண்ணெய் தீபம்:
ஒரு வெற்றிலை எடுத்து, அதனை நல்லெண்ணெய் ஊற்றிய தீபம் ஏற்றிய ஒரு அகல் விளக்கில் சூடு காட்ட வேண்டும். அதிகமாக வாட்டி விடாமல். குழந்தைக்கு சூடு பொறுக்கும் அளவுக்கு வெற்றிலையை வாட்டி இதமான சூட்டில் குழந்தையின் மார்பு, முதுகு, இடுப்பின் பக்கவாட்டு பகுதியில் ஒரு 30 நிமிடம் வைக்க வேண்டும்.
இஞ்சி,பூண்டு, தூதுவளை, தேன் மருந்து:
ஒரு பல்லு பூண்டு, ஐந்து அல்லது ஆறு வால்மிளகு, ஒரு சிறு துண்டு இஞ்சி இவற்றை நன்கு இடித்து கொள்ள வேண்டும். தூதுவளை இலையை அதன் முட்கள் எல்லாம் எடுத்து சுத்தமாக கழுவி அதனை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரைத்து வைத்த தூதுவளை இலையை ஒரு ஸ்பூன் மட்டும் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு கலவையில் சேர்த்து அதனுடன் சுத்தமான தேன் இவையனைத்தையும் நன்கு கலந்து கொடுக்கலாம்
- கை குழந்தைகளுக்கு - விரலில் எடுத்து குழந்தையின் நாக்கில் தடவி விட்டால் போதும்.
- ஆறுமாத குழந்தைக்கு - இரண்டு, மூன்று சொட்டுகள் குடுக்கலாம்.ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு ஒரு சின்ன ஸ்பூன் அளவு இந்த மருந்தை குடுத்து வர நெஞ்சு சளி மலத்தில் வெளியேறிவிடும். இதனை தாய்ப்பால் குடுக்கும் தாய்மார்களும் சாப்பிடலாம்.
கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை:
கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை மூன்றையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு அதனுடன் சிறதளவு சுத்தமான தேன் கலந்து குழந்தைகளுக்கு சிரப் மாதிரி குடுக்கலாம் மார்பு சளி குணமாகும்.
நெஞ்சு சளி பிடிக்காமல் குழந்தையை பராமரிக்க உதவும் மேலும் சில வழிகள்
- குழந்தைக்கு தலைக்கு குளிக்க வைக்க வேண்டாம். சில நாட்கள் உடலை துடைத்துவிடலாம்.
- ஆரம்ப அறிகுறிகள் இருக்கும் போதே மிதமான சூட்டில் தண்ணீர் பாலடையில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கொடுக்கலாம்.
- தாய்ப்பால் கொடுப்பவர்களின் உணவில் மிளகு ரசம், தூதுவளை ரசம், கசாயம் போன்றவற்றை எடுப்பதன் மூலம் குழந்தைக்கு சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
- கடையில் குழந்தை பெற்றவர்களுக்கு மருந்து குழம்பு வைக்க பொடி கிடைக்கும். அதை வாங்கி வந்து மிளகு குழம்பு போல் செய்து சுடு சாதத்தில் ஊற்றி சாப்பிடுங்கள்.
- தாய்ப்பால் குடுப்பவர்கள் மோர், தயிர் தவிர்த்துவிடுங்கள்.
- உங்களுக்கு சளிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூசி இருக்கும் இடத்தை தவிர்த்துவிடுங்கள். ஆரம்பத்திலேயே உங்கள் சளியை குறைத்துவிடுங்கள்.
சளி இருமல் இருக்கும்போது தண்ணிரை சூடு செய்து குடிக்க வைக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள தொற்றும் நீங்கும், சளியும் கரைய உதவும். குழந்தைகளுக்கு நெஞ்சு சளி போக அதிகபட்சமாக ஒரு மாத காலம் கூட ஆகலாம். முடிந்தவரை குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி கட்டாமல் பார்த்துக்கொள்வோம். அப்படியே சளி பிடித்தாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து பக்கவிளைவு இல்லாத வீட்டுவைத்தியத்தில் குணப்படுத்துவோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...