குழந்தைகளின் எடையை அதிகரி ...
குழந்தைகளின் எடையை பற்றி அம்மாக்களுக்கு எப்போதுமே ஒரு குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். என் குழந்தையின் எடை சரியாக இருக்கிறதா? அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும். இதே போல் குழந்தை பருமனாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்று நினைத்து கவலை கொள்கிறோம். குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆக்டிவ்வாக இருந்தாலே போதும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.
இந்த பதிவில் குழந்தைகள் அவர்களின் வயதுக்கேற்ற எடையை விட குறைவாக இருந்தால் அவர்களின் எடையை வீட்டு இயற்கை உணவுகள் மூலம் எப்படி அதிகரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
தாய்ப்பால்
குழந்தையின் எடையை இயற்கையாக அதிகரிக்க நமக்கு கிடைத்திருக்கும் சிறந்த உணவு தாய்ப்பால். குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடிப்படையானது இந்த தாய்ப்பால். மேலும் நீங்கள் சரியாக தான் தாய்ப்பால் கொடுக்கிறீர்களா என்று அறிய குழந்தை ஒரு நாளைக்கு 6- 8 முறை சிறுநீர் கழிக்கும் மற்றும் 3-4 முறை மலம் கழிக்கிறதா என்று அவசியம் பாருங்கள். இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை அறிய உதவியாக இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அளிக்கலாம். பாலில் கலந்து ஜூஸாக கொடுக்கலாம். ஸ்மூத்தி போன்ற பானமாக தயாரித்து கொடுக்கலாம். நேந்திர வாழைப்பழம் எடையை அதிகரிக்க அதிகளவில் உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. உங்கள் குழந்தை இயற்கையாக எடை அதிகரிக்க மற்றும் கொழுகொழுவென ஆறொக்கியமாக மாறுவார்கள்.
கேழ்வரகு - ராகி
ராகி கஞ்சி, ராகிப்பால், ராகிக்கூழ் இவை அனைத்தும் ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன. இதனை இட்லி, தோசையாகவும் தயாரித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
பால் பொருட்கள்
பசும்பால், பாக்கெட் பால், வெண்ணெய், தயிர் மோர், சீஸ், பன்னீர் போன்ற உணவுகளை கண்டிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தயிர் சாதமாக கொடுக்கலாம். இதில் அதிக கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது
நெய்
நெய் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குழந்தைக்கு கொடுக்கும் எல்லா வகை உணவிலும் சிறிது நெய் சேர்த்துக் கொடுக்கலாம். கிச்சடி, பொங்கல்,களி, பருப்பு சாதம் போன்ற உணவுகளை நெய் கலந்து கொடுக்கும் போது குழந்தைகள் நன்றாக சாப்பிடவும் செய்வார்கள். எடையும் அதிகரிக்கும். அதிகமாகவும் நெய் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
யோகர்ட்
கால்சியம், கலோரிகள், வைட்டமின், தாதுக்கள், நல்ல கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன. குழந்தைக்கு எளிதில் செரிமானமாக உதவும். அதே சமயம் எடையும் அதிகரிக்கும். பழங்களால் செய்யப்பட்ட ப்யூரியில் யோகர்ட் கலந்து கொடுக்கலாம். ஸ்மூத்தியில் யோகர்ட் சேர்த்துக் கொடுக்கலாம்.
இனிப்பு உருளைக்கிழங்கு – சர்க்கரை வள்ளிக்கிழங்கு
பொதுவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சுவை குழந்தைகளுக்கு பிடிக்கும். திட உணவுகளில் இதை ஒரு பங்காக சேர்க்கலாம். இதை அவித்து, மசித்துக் கொடுக்கலாம். இந்த கிழங்குகள் வைட்டமின் ஏ, சி, பி6, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏராளமான சத்துக்களை கொண்டவை. இவற்றை குழந்தைகளுக்கு பிடித்தவாறு தயாரித்து கொடுக்கலாம். காய்களை நன்கு வேகவைத்து, சாலட் போன்று செய்தும் அளிக்கலாம். பழங்களை டிக்கா மற்றும் சாலட் செய்து கொடுக்கலாம்.
பருப்புகள்
பருப்பு வகைகளும் குழந்தைகளுக்கு சத்தானது. எடையையும் அதிகரிக்க உதவுகின்றது. பாசிப்பருப்பு எளிதில் ஜீரணமாக கூடியது. பருப்பு சாதம், சூப், கூழ் போன்றவற்றை தயாரித்து ஊட்டலாம். பருப்புகளில் புரதம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.
முட்டை
முட்டை புரதம் நிறைந்த உணவு. இதனை பொரித்தோ, ஆம்லெட் போட்டோ, வேக வைத்தோ - எந்த வடிவத்திலும் குழந்தைக்கு 1 வயதிற்கு பின் அளிக்கலாம்.
அசைவ உணவுகள் மீன்
மீனில் புரதம், விட்டமின் டி, ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சிக்கு உதவும். மீனை பொரித்துக் கொடுப்பதை விட குழம்பு மீனில் சத்து அதிகம்.
பிராய்லர் சிக்கனுக்கு பதில் நாட்டுக்கோழி சிக்கனை - இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழியின் இறைச்சியை நன்கு வேகவைத்து குழந்தைகளுக்கு பிடித்த வகையில் தயாரித்து கொடுக்கலாம்.
ஆட்டு ஈரலும் குழந்தைக்கு நல்லது மற்றும் எடையை அதிகரிக்கும். சின்ன வெங்காயம், சிறிது மிளகு சீரகம் சேர்த்து சமைத்துக் கொடுக்கலாம். நன்றாக மசித்து சாதத்துடன் கலந்து கொடுக்கலாம்.
உலர் பழங்கள்
பாதாம், பிஸ்தா மற்றும் பல உலர் பழ பருப்பு வகைகளை ஒன்றாய் சேர்த்து சத்துமாவு போடி தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம், அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எடையையும் அதிகரிக்கும்.
அவகேடோ
அவகேடோவில் வைட்டமின் இ, சி, பி6, கே, பேன்டோதெனிக் அமிலம், காப்பர், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இந்த வெண்ணெய் பலத்தை குழந்தைகளுக்கு பழச்சாறு - பாலுடன் கலந்த ஸ்மூத்தி வடிவில் கொடுத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் கூடும்.
கொழுப்பு மிகுந்த உணவுகளை கொடுத்து எடையை அதிகரிப்பதை விட சத்துக்கள் நிறைந்த இயற்கையான உணவுகள் மூலம் எடையை அதிகரிப்பதே நன்மை. தாய் வழி, தந்தை வழி போன்ற மரபியல் காரணமாகவும் குழந்தைகள் ஒல்லியாக இருக்கலாம். எனவே அவர்களை குண்டாக மாற்ற அதிக உணவைத் திணிக்கக்கூடாது. குழந்தைகள் நன்றாக விளையாடினால் நன்றாக பசிக்கும். அப்போது நன்றாக சாப்பிடுவார்கள். குழந்தை ஒல்லி, குண்டு எனப் பார்க்காமல் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதே முக்கியம்
Be the first to support
Be the first to share
Comment (0)