பிரசவத்திற்கு பிறகு உடல் ...
கர்ப்பகாலத்தில் எல்லா பெண்களின் உடல் எடையும் 10 முதல் 15 கிலோ வரை அதிகரிக்கும். இப்படி அதிகரிப்பது தான் ஆரோக்கியம். ஆனால் அதுவே பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த எடையை எப்படி குறைப்பது என்பது தான் பெரும்பாலான பெண்களின் கவலையாக இருக்கிறது.
கர்ப்ப காலத்தில் அதிகரித்து விட்ட உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அப்படி குறைக்க முயற்சிக்கும் போது சில தவறுகள் செய்வதுண்டு. இது சரியான முயற்சியா என்பதை சிந்திப்பது பார்ப்பது அவசியம்.
உடல் எடையை குறைப்பது முக்கியம் தான். அதே சமயம் அது தாயின் ஆரோக்கியத்தையோ அல்லது குழந்தையின் ஆரோக்கியத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
டயட்:
பெரும்பாலான பெண்கள் குழந்தை பிறந்ததும் உடல் எடையை குறைப்பதற்கு டயட் அதாவது உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் போது டயட்டில் இருந்தால் குழந்தைக்கும் போதுமான சத்து கிடைக்காது; அதே சமயம் தாயும் பலவீனம் அடைய நேரிடுகிறது.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் தான் குழந்தைகளுடைய உணவாக இருக்கிறது. அதனால் குழந்தையின் தாய் சத்துள்ள ஆகாரங்களாக சாப்பிடுவது ரொம்ப முக்கியம்.
அந்த சமயங்களில் பழ வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் தவிர்க்கப்படுவதோடு உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
தாய்ப்பால்:
நம் சமூகத்தில் பெரும்பாலானோருக்கு ஒரு தவறான புரிதல் இருக்கின்றது. தாய்ப்பால் கொடுப்பதால் உடல் எடை அதிகரிக்கும்; தாயின் ஆரோக்கியம் கெட்டுப் போய்விடும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் எடை அதிகரிக்காது. அதுமட்டுமல்ல தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுடைய ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்க்கும்போது தான் அவர்களுடைய எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல். ஆரோக்கிய குறைபாடும் ஏற்படுகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே ஒரு தாய்க்கு 500 கிலோ கலோரி இழப்பு ஏற்படுகிறது. அதனால் ஒரு வருடம் தாய்ப்பால் கொடுத்தாலே அவர்கள் பிரசவத்திற்கு முன்பிருந்த எடைக்கு வந்து விடுவார்கள்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதன் மூலம் நாம் நம்முடைய எடையை நிச்சயமாக குறைக்க முடியும். ஆனால் பிரசவம் முடிந்ததும் இளம் தாய்மார்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது. பிரசவித்த பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கு அது சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை என ஒவ்வொரு பிரசவத்திற்கும் கால அவகாசம் உண்டு. அதன் பிறகே செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தியானம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தோடு மன அமைதியும் கிடைக்கும்.
நல்ல தூக்கம்
பிரசவத்துக்கு பிறகு கண்டிப்பாக நல்ல தூக்கம் தேவைப்படும். பொதுவாக நன்றாகத் தூங்கும்போது உடல் எடை அதிகரிக்கும். ஆனால் பிரசவத்துக்கு பிறகு நன்றாக தூங்கினால் மட்டுமே உடல் திரும்பவும் பழைய நிலைமைக்கு வரும். குழந்தை விழித்திருக்கும் போது நாம் தூங்க முடியாது என்பதால் அவர்கள் தூங்கும்போதே நாமும் தூங்கிக் கொள்வது நல்லது.
பெல்ட் அணிவது
குழந்தை பிறந்ததும் அவர்களை கவனிக்கும் ஈடுபாட்டில் வயிற்றுக்கு பெல்ட் அணிவதை பெரும்பாலான பெண்கள் மறந்து விடுவார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு தொப்பை விழுந்து விட்டதே என்று வருத்தப்படுவார்கள். அதனால் குழந்தை பிறந்த மறுநாளே தாய்மார்கள் வயிற்றில் பெல்ட் அணிவது பிற்காலத்தில் தொப்பை வருவதை தடுக்கும்.
உடை எடையை திடீரென்று குறைப்பது சாத்தியமில்லை. அதுவும் இந்த நேரத்தில் கொஞ்சம் அவகாசம் எடுத்த பின்னரே குறைப்பது ஆரோக்கியமானது. கவலை வேண்டாம்.. சரியான வழிகளை பின்பற்றினாலே உங்களால் சிரமம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும். நீங்கள் உங்கள் எடையை எப்படி குறைத்தீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளலாம். மேலும் இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்கள் நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Be the first to support
Be the first to share
Comment (0)