கொரோனா தடுப்பூசி: இந்தியா ...
இப்போது தமிழகத்தில் எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்வது என்ற நிலை மாறி என்ன தடுப்பூசிப் போட்டு கொள்ளலாம் என்றளவுக்கு தடுப்பூசிகளின் வகைகள் வந்துவிட்டது. ஏற்கனவே கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஸ்பூட்நிக்-வி தடுப்பூசியும் போட்டுக் கொள்ள ஆரம்பிள்ளனர். இது மட்டுமில்லாமல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த பதிவில் இந்தியாவில் தற்போது என்னென்ன தடுப்பூசிகள் உள்ளது மற்றும் தடுப்பூசியின் விவரங்களையும் விரிவாக பார்க்கலாம்.
கோவாக்ஸின் தடுப்பூசி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவிலேயே தயாரித்துள்ளது. இந்த கோவாக்சின் தடுப்பூசி போட்ட உடன் வைரஸூக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க நம் உடலானது நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. ஆன்டிபாடிகள் வைரஸ் புரதங்களுடன் இணைகின்றன, இப்பொழுது ஆன்டி பாடிகள் வைரஸை இனம் கண்டறிந்து அழிக்கின்றனர். கோவாக்சின் 9 நாடுகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
3 கட்ட சோதனையின் ஆரம்ப தரவுகளின்படி 81 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக உள்ளது. இது 2 டோஸுடன் எடுக்கப்பட வேண்டும், முதல் டோஸிலிருந்து 28 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசி பருவகால இன்ஃப்ளூயன்ஸா, ரேபிஸ், போலியோ, பெர்டுசிஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இதே முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
கோவிஷில்டுடன் ஒப்பிடும்போது கோவாக்ஸின் தடுப்பூசி போட்ட பிறகு ஒருவருக்கு குறைவாக எதிர்வினைகள் வருவதாக கூறப்படுகின்றது. இது அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது. எனினும் காய்ச்சல், உடம்பு வலி போன்ற நோய்வாய்ப்படுத்து குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டது.
மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 600 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 1,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியது. சிம்பன்ஸி போன்ற மனித குரங்கிடம் இருந்து சளி சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடினோ வைரஸை” அடிப்படையாகக் கொண்டு இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்ட பிறகு தலைவலி, மூட்டு வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும், ஆனால் இது 1-2 நாட்கள் மட்டுமே நீடிக்கும். சுமார் 150 நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை தரவுகளின்படி, கோவிஷீல்ட் 70% செயல்திறன் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசி 2 டோஸில் எடுக்கப்பட வேண்டும், முதல் டோஸுக்கு 84 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டும். கோவிஷீல்ட் எபோலாவுக்கு தடுப்பூசிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
சீரம் நிறுவனம் கோவிஷீல்ட்டை மாநிலங்களுக்கு ஒரு டோஸுக்கு ரூ .400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ .600 ஆகவும் வழங்குகிறது.
ஸ்பூட்னிக் வி என்பது கோவலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 க்கான அடினோ வைரஸ் திசையன் தடுப்பூசி ஆகும். கொரோனா வைரஸின் ஒரு சிறு பகுதியை நம் உடலில் எடுத்து செல்ல, ஒரு சளி வைரஸைப் பயன்படுத்துகிறார்கள். கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை உடல் முழுக்க கொண்டுசெல்ல அது உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.
இது கோவிட் -19 வைரஸிலிருந்து சுமார் 92% செயல்திறனை கொண்டுள்ளது. இந்த தடுப்பூசி 2 டோஸில் எடுக்கப்பட வேண்டும். முதல் டோஸ் கொடுத்து, 21 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் வழங்கப்படும். 28-வது நாளிலிருந்து 42-வது நாளுக்குள் உடலில் அதிகபட்ச நோய் எதிர்ப்பாற்றல் உருவாகும். ஸ்புட்னிக் V தடுப்பூசி எந்த அளவுக்கு செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு பாதுகாப்பானது, பெரிய பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பது பரிசோதனையில் காணப்பட்டது.
இந்தியாவில் இந்த தடுப்பூசியின் விலை 5% ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து 995.4 ரூபாய். அப்போலோ மருத்துவமனை, ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ரூ.1,250 நிர்ணயித்துள்ளது.
மாடர்னா தடுப்பூசியும் ஃபைசர் போலவே எம்ஆர்என்ஏவை அடிப்படையாகக் கொண்டது. மார்டனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. எனினும் பைசர் தடுப்பூசி மட்டும் 12 -18 வயது சிறுவர்களுக்கும் போடப்படுகிறது. மாடர்னா கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கான மாதிரியில் நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது என்று சயின்ஸ் இம்யூனாலஜி விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருக்கிறது. மாடர்னா தடுப்பூசி அறிகுறி கோவிட் எதிராக 94% செயல்திறனை அளிக்கிறது.
ஃபைசர்-பயான்டெக் அதன் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான உருவான தடுப்பூசி. ஃபைஸர் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ளோருக்குச் செலுத்தியபோது, அவர்களுடைய உடலில் வைரஸ் கிருமிகளைத் தடுக்கும் ஆன்டிபாடிகள் 16 - 25 வயது வரை உள்ளோரிடம் உருவானதைவிட அதிகமாகவே உருவாயின.
ஜான்சன் தடுப்பூசியை அமெரிக்க மருத்துவ நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் உருவாக்கியுள்ளார். இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் செயல்படுத்தப்படுகிறது, இந்த தடுப்பூசி 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில், 85 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று தெரியவந்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் 'ஜேன்சன்' கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் டோஸ் தடுப்பூசியான இது அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தலாமா? என்ற கேள்வி மக்களிடையே அதிகமாக வர தொடங்கியுள்ளது. தடுப்பூசிகளின் பற்றாக்குறை மற்றும் தாமதம் இன்றி தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்காக இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தலாமா என்ற சந்தேகத்திற்கு, கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பொறுத்த வரையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளுக்கு ஒரேமாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. உடம்பு வலிம் குமட்டல், லேசான காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல், ஒவ்வாமை, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் தடிப்பு போன்றவை வெளிப்படலாம். ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்துக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கொரோனாவின் எத்தனை அலைகள் வந்தாலும் தடுப்பூசி மட்டுமே சிறந்த பாதுகாப்பு ஆயுதமாக விளங்குகிறது. தடுப்பூசிகளைப் பற்றி பல்வேறு வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் குழந்தைகளை பாதுகாக்க வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொள்வது அவசியமாகின்றது. இதன் மூலம் குழந்தைகளை நாம் பாதுகாக்க முடியும். கொரோனாவின் அலைகளை நினைத்து கவலைப்படுவதை விட இந்த மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தங்களை பாதுகாக்க முடியும். இதன் மூலம் அடுத்த வரவிருக்கும் கொரோனாவின் தாக்கத்தை நாடு முழுவதும் இணைந்து குறைக்க முடியும்.
Be the first to support
Be the first to share
Comment (0)