கொரோனாவோட இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள்ல நானும் உண்டு. இப்பவரைக்கும் இந்த தொற்று எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது. ஆனா வந்ததை உறுதிப்படுத்தவே எனக்கு மூன்று நாள்கள் ஆனது. ஏனென்றால் எனக்கு வேறு சில உடல்நலப் பிரச்ச்னைகள் இருந்ததால கொரோனா ஆரம்ப அறிகுறிகளோடு சேர்த்து எனக்கு குழப்பம் வந்துவிட்டது. எனக்கு மிதமான அறிகுறிகள் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உடல்நலப்பிரச்சனைகள் இருந்தது. இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இல்லை. ஆனால் எழுந்து கூட நிற்க முடியாது. தலைசுற்றல், வாசனை மற்றும் ருசி தெரியவில்லை. உடம்பு வலி இருந்தது. ஒருவழியாக கொரோனா என்பதை உறுதி செய்தோம்.
முதலில் என்னை அச்சுறுத்தியது மலைப்போல் உள்ள சவால்கள். இதை எதிர்கொள்ள எனக்கு என்னென்ன விஷயங்கள் உதவியது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏன்னா என்னை மாதிரி இன்னைக்கு நிறைய அம்மாக்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டில் தனிமப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் கடந்த வர உதவிய நிறைய பாஸிட்டிவ்வான விஷயங்கள் குறிப்பாக என் குடும்பம் எப்படி உதவியது என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வீட்டில் எவ்வாறு என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்?
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதை சொல்வதற்கு முன் என் குடும்பத்தை பற்றியும், என்னுடைய சூழலைப் பற்றியும் கூறுகிறேன். நான் என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளோடு ஒரு ப்ளாட்டில் வசிக்கிறேன். ஒரு குழந்தைக்கு 8 வயது, மற்றொரு குழந்தைக்கு 3 வயது. என் பசங்களை சொந்தக்காரங்க யார் வீட்டுலயும் விடுற மாதிரியான உறவுகள் இந்த ஊரில் கிடையாது. நெருங்கிய உறவுகள் வெளியூரில் இருந்தார்கள். ஆகவே நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் இருக்க வேண்டும் என்ற நிலை தான் என் முன் இருந்த முதல் பெரிய சவால்.
என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை முதலில் நானும் கணவரும் வீட்டில் செய்தோம் என்பதை வரிசையாக கூறுகிறேன்
- முதலில் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டேன். மருத்துவமனை செல்லும் அளவு தீவிர சிகிச்சை தேவைப்படாததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சொன்னார். கூடவே அவர் சில பொருட்களை வாங்க பரிந்துரை செய்தார். ஆக்ஸிமீட்டர், நிறைய மாஸ்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள்.
- வீட்டில் இருந்த ஒரு அறையில் நான் ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தை தேர்வு செய்தேன். எனக்கென்று ஒரு தட்டு, டம்ளர், ஒரு தண்ணீர் சொம்பு என தனியாக எடுத்துக் கொண்டேன்.
- என் அருகில் எப்போதும் சானிடைஸர் இருக்கும். பால்கனியோடு இருந்த அறை என்பதால் கை, கால், முகம் கழுவுவது என அனைதையும் அங்கேயே செய்வேன்.
- வீட்டில் ஒரு பாத்ரூம் என்பதால் எப்போதெல்லாம் நான் டாய்லெட் பயன்படுத்துகிறேனோ அதன் பிறகு கிருமி நாசினி போட்டு நன்கு டாய்லெட் முழுவதும் க்ளீன் செய்துவிட்டு தான் வருவேன். இந்த அச்ச மனநிலையை அவ்வளவு சாதரணமாக கடக்க முடியவில்லை. ஆனால் வீட்டில் மற்றவர்களுக்கு இது பரவக்கூடாது என்பதற்காக ஒரு நாளில் 5 அல்லது 6 தடவை டாய்லெட் போனாலும் சுத்தம் செய்துவிட்டு தான் வருவேன்
- கணவர் மட்டும் தான் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். குழந்தைகளை என்னுடன் நெருக்கமாகவோ, தொடவோ செய்ய மாட்டேன்.
- பகல் முழுவதும் மாஸ்க் அணிந்திருப்பேன். தூங்கும் போது மட்டும் கழற்றிவைப்பேன்.
- 3 மீட்டர் இடைவெளியில் மட்டுமே மாஸ்க் அணிந்து கொண்டு பேசுவேன்.
- அடிக்கடி கைகளை ஹேட் வாஷ் போட்டு கழுவுவது. அடிக்கடி கைகளை சானிடைஸர் போடுக் கொள்வது என தவறாமல் செய்வேன்.
- வீட்டில் வேப்பிள்ளை புகை தினமும் போடுவேன். அதாவது கங்கு எடுத்துக் கொண்டு அதில் பூண்டு தோல், வேப்பிள்ளை இலை, ஓமம் அனைத்தையும் போட்டு அந்த புகையை வீடு முழுவதும் காட்டுவேன்.
வீட்டில் தாய்மார்களுக்கு கொரோனா வந்தால் குடும்பமே சாப்பாட்டுக்கு திண்டாடுவார்கள். இங்கும் அதே நிலைமை தான். முதல் 10 நாட்கள் ரொம்ப சிரமப்பட்டோம். கணவருக்கு தெரிந்த சமையல், ஹோட்டல் சாப்பாடு, அடுப்பில்லா சமையல் என நாட்களை கடத்தினோம். என் மகளும் சமைக்க உதவுவாள். சப்பாத்தி மாவு தேய்த்துக் கொடுப்பது, சூப் போட்டுக் கொடுப்பது, தோசை ஊற்றுவது என குழந்தையாள் முடிந்ததை செய்து கொடுப்பாள்.
நாங்கள் கடைப்பிடித்த சில உணவுப்பழக்கத்தை பற்றி கூறுகிறேன். உங்க குழந்தைகளுக்கும் நல்லது.
- எங்க வீட்டில் தினமும் ஒரு சுண்டலோ, பயிறோ, வேர்க்கடலையோ ஏதாவது ஒன்றை முதல் நாள் ஊற வைத்து அடுத்த நாள் அவித்துக் கொடுப்பதை என் கணவர் மறக்காம செய்வார். அதன் பிறகு மாஸ்க் அணிந்து கொண்டு நான் சமைக்க ஆரம்பித்தேன்.
- குழந்தைகள் இருவருக்கும் தினமும் நிலவேம்பு சிரப்(சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும்) தவறாமல் கொடுப்பது
- தேனில் ஊற வைத்த நெல்லிக்கனி கொடுப்பது
- பழங்கள் கொடுப்பது
- காய்கறி வகைகள், கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது
- இந்த சமயத்தில் நான் காபி, டீ குடிப்பதில்லை. லவங்கப்பட்டை, சுக்கு, துளசி இலை, மிளகு எல்லாம் சிறிது எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, நாட்டு சர்க்கரை கலந்து குடிப்பதை தினமும் தவறாமல் செய்வேன். இது உங்கள் நுரையீரலுக்கு நல்லது. நுரையிரலில் தொற்று, சளிப்பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
- திப்பிலியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது.
- தினமும் தவறாமல் ஆவிப்பிடிப்பது. அதாவது வேப்பிள்ளை மற்றும் இரண்டு சொட்டு யூகலிப்டஸ் தைலம் போட்டு ஆவி பிடிப்பது. சுவாசம் சீராக உதவும்.
நான் சமைக்கும் போது பின்பற்றிய சில பாதுகாப்புகள்
- சமைக்கும் போது மாஸ்க்கை கழற்றவே மாட்டேன்.
- அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவுவேன்.
- உப்பு, காரம், புளிப்பு சரியாக இருக்கிறதா என்று நான் பார்க்க மாட்டேன். என் கணவரை அழைத்து அவரை சரிபார்க்க சொல்வேன்.
- சமைக்கும் போது வாய் மற்றும் மூக்கு பகுதியில் கை வைப்பதை தவிர்த்துவிடுவேண். அப்படியே தொட நேர்ந்தாலும் உடனே கைகளை சோப் போட்டு நன்கு கழுவி விட்டு அதன் பிறகு சமையலை தொடர்வேண்.
- சாப்பாட்டில் நேரடியாக என் கைகள் படும்படி தொடமட்டேன்.
- குறிப்பாக, அதிக விழிப்புணர்வோடு இருப்பேன். நம்மை அறியாமல் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் அம்மக்களுக்கு இருந்தாலும், தைரியமாக, பாதுகாப்பாக, விழிப்புணர்வோடு செய்யலாம். பயமோ, பதட்டமோ வேண்டாம்.
- ஆனால் சளியோ, இருமலோ, மூச்சுத்திணறலோ இருந்தால் தயவு செய்து சமைக்காதீர்கள். கடையிலோ, உறவினர்களையோ அல்லது நண்பர்களிடமோ உதவி கேளுங்கள். ஏனென்றால் நிலைமையை இன்னும் மோசமாக்கும். கவனம் தேவை
இப்படியே உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களை நாங்கள் குடும்பத்தோடு சேர்ந்து வெற்றிகரமாக எதிர்கொண்டோம். கடினமான காலம் தான். குழந்தைகளுக்கு சரியாக சாப்பாடு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தம் எல்லா அம்மாக்களையும் போல் என்னையும் படுத்திவிடும். ஆனால் இப்போது நாம் கவலைபட்டால் கொரோனாவில் இருந்து மீளும் நாட்கள் அதிகரிக்கக்கூடும். அதனால் முடிந்தவரை சீக்கிரம் குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே நானும் என் கணவரும் நோக்கமாக இருந்தோம்.
குழந்தைகளை எவ்வாறு சமாளித்தோம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது நான் பதட்டமடைந்த ஒரே விஷயம் என் குழந்தைகளை கணவர் எப்படி தனியாக பார்த்துக் கொள்வார். மிகவும் கடினமான நாட்கள். என் குழந்தைகளை தொடவோ, கொஞ்சவோ முடியவில்லை. மனவேதனையாக இருந்தது. அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள், தூங்குவார்கள் என பல எண்ணங்கள். இதுவரை என் வாழ்நாளில் இப்படியான நாட்களை நான் அனுபவத்ததில்லை. ஆனால் நானும் கணவரும் குழந்தைகளுக்கு எந்த வித அச்ச உணர்வும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். முடிந்தவரை அவர்களை ஈடுபாடாகவும், மகிழ்ச்சியாகவும் வைப்பது பற்றியே அதிகம் திட்டமிட்டோம்.
- என் மகளிடம் எனக்கு இருந்த பிரச்சனைகளை பற்றி கூறினோம். பயப்பட வேண்டாம். அம்மா இன்னும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடுவேன். அதுவரை என்னை தொடவோ, அருகிலோ வர வேண்டாம். உனக்கும் காய்ச்சல் வந்துவிடும் என்று பொறுமையாக எடுத்து சொன்னோம். எந்த குழந்தைக்கு தான் அதிர்ச்சியாக இருக்காது. முதல் இரண்டு நாள் அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அதன்பிறகு அவள் பழகிக்கொள்ள ஆரம்பித்தாள்.
- அடுத்தது என் மகன். இவனை கையாள்வது பெரிய சவால். மகளுக்கு சொன்னால் புரியும். இவனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. இருந்தாலும், என்னிடம் நெருக்கமாக வரவிடாமல் வைக்க திசைத்திருப்புவது, விளையாட்டு காட்டுவது, பாட்டு போடுவது என அவனுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட வைத்தோம்.
- ஒரே வீட்டில் இருந்ததால் குழந்தைகள் என்னுடன் பேச முயற்சி செய்வார்கள். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. குறைந்தது 3 மீட்டர் இடைவெளியில் நான் மாஸ்க் அணிந்து கொண்டு பேசுவேன்
- முதலில் என் மகளுக்கு தேவையான சில விளையாட்டு சாமான்கள், ட்ராயிங், பெயிட்டிங், கிராஃப்ட் வொர்க் செய்ய தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தோம்.
- வீட்டில் செய்யும் வேலைகளில் இரு குழந்தைகளையும் ஈடுபட வைப்பது.
- அவர்களுக்கு பிடித்த படம், ரைம்ஸ், கதைகள் போட்டுக் காட்டுவது.
- தினமும் மொட்டை மாடியில் கணவர் அவர்களோடு விளையாடுவது.
- வீட்டில் அதிமாக கொரோனா பற்றியோ, இறந்தவர்கள் பற்றியோ பேசுவதை தவிர்ப்பது.
- கை கழுவுவது, மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை வேடிக்கையாக சொல்வது.
- என்னிடம் பேசும் போது மாஸ்க் அணிந்து கொண்டு பேச வைப்பது.
குழந்தைளின் உணர்ச்சியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். சில நேரம் அடம், அழுகை, சாப்பாடு மற்றும் தூக்கத்தில் சிக்கல் இதல்லாம் கடந்து போகும் என்ற ஒற்றை நம்பிக்கை தான் மனதை திடப்படுத்த உதவியது. என்னுடைய கணவரின் பங்கு தான் மிகப்பெரியது. குழந்தைகளை தனியாக பார்த்துக் கொள்வது என்பது அத்தனை சுலபம் கிடையாது. அவர் அதை மனநிறைவோடு செய்தார். குழந்தைகளும் இந்த விஷயத்தில் ஒத்துழைத்தார்கள் என்பது தான் எனக்கு கிடைத்த பெரிய ஆறுதல். குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு நாம் செய்யும் செயல்களை அவர்கள் உணர்கிறார்கள். குழந்தைகள் உதவ நினைக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இது போன்ற சூழ்நிலையில் அவர்கள் நமக்கு உதவ முன்வருவார்கள்.
கொரோனாவை வெல்ல எனக்கு உதவிய 6 விஷயங்கள்
என்னுடைய அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். எளிதாக கிடைப்பத்தில்லை பாசிட்டிவ்வான மனநிலை. அதுவும் இந்த மாதிரி சமயங்களில் நமக்கிருக்கும் பயம், பதட்டம், வருத்தம், குற்றவுணர்ச்சி, இயலாமை என நெகட்டிவ்வான உணர்ச்சிகள் நம்மை சூழ்ந்துவிடும். இத்தனையும் தாண்டி பாசிட்டிவ்வான மாநிலையை அடைவது என்பது தீவிர முயற்சியால் மட்டுமே கிட்டும். ஆமாங்க! என்னை ஊக்கப்படுத்திய, பாசிட்டிவ்வாக இருக்க உதவிய 5 விஷயங்கள்.
- மூச்சுப்பயிற்சி/தியானம் – தினமும் இரண்டு தடவை மூச்சுப்பயிற்சி செய்வது. என்னை அமைதிப்படுத்த இது பெரிதளவில் உதவியது. அதே போல் என் சுவாசத்தை சீராக்கவும் உதவியது. பயம், பதட்டம் போன்றவற்றிலிருந்து வெளியில் வர உதவியது.
- ஆரோக்கியமான உணவு – கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அதிக பசி இருந்தது. நேரத்திற்கு நேரம் சரியாக சாப்பிடவில்லை என்றால் குமட்டல் வரும். அதனால் ஊட்டச்சத்துள்ள உணவு எடுத்துக் கொண்டதன் மூலம் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க முடிந்தது.
- தூக்கம்/ஓய்வு – இது மிகவும் முக்கியமாக நான் கடைப்பிடித்த ஒன்று. நன்றாக ஒய்வும், தூக்கமும் குணமடைய அதிகமாக உதவுகிறது. நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும்.
- அடிக்கடி கொரோனா பற்றிய செய்திகளை பார்ப்பதை தவிர்ப்பது- தேவையான தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டு, அடிக்கடி கொரோனா பற்றிய செய்தி பார்ப்பதை தவிர்த்தேன். சமூக வலைதளங்களில் அதிகமாக ஈடுபடுவதில்லை. கிடைக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பது, காமெடி படம் பார்ப்பது, என்னால் முடிந்த சின்ன சின்ன வீட்டு வேலைகளை பாதுகாப்போடு செய்வது, குழந்தைகளோடு பேசுவது என ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டேன்.
- குடும்பத்தின் ஆதரவு – எவ்வளவு வசதிகள் இருந்தாலும், குடும்பத்தின் ஆதரவு மிகப்பெரிய பலம். என் கணவர் காட்டிய அக்கறையும், அன்பும், குழந்தைகளை பராமரித்ததும் என்னை நிம்மதியடைய வைத்தது. நான் குணமடைய உதவியதில் இதன் பங்கு மிக அதிகம்.
- பாசிட்டிவ்வான மனநிலை – இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை நான் ஒவ்வொரு கனமும் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஏனென்றால் என் குழந்தைகளை நான் தொட்டுக் கொஞ்ச வேண்டும். என்னுடைய இல்லம் சீக்கிரமே சாதாரண சூழ்நிலைக்கு மாற வேண்டும். நான் குணமானால் தான் இது நடக்கும். நான் குணமாக வேண்டுமென்றால் நான் நலமோடு இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்காக ஒவொரு நாளும் என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். வெற்றியும் அடைந்தேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த 15 நாட்களும் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. பெரும்பாலும் என் உடம்பை நான் சரியாக பார்த்துக் கொள்வது கிடையாது. இந்த தருணத்தில் உடலின் சக்தியை, முக்கியத்துவத்தை உணர்ந்தேன். என் குடும்பத்திற்கு நான் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். கோபத்தில் சொல்வதுண்டு நான் இல்லைன்னா தான் உங்களுக்கெல்லாம் அருமை தெரியும்னு. ஆனா இதே தான் நானும் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். கணவனோ, மனைவியோ ஒரு குடும்பத்தின் அருமையை இந்த மாதிரி சமயங்கள் தான் உணர்த்தும். பயமோ, பதட்டமோ அடைய தேவையில்லை. உங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடியுங்கள், விழிப்புடன் செயல்படுங்கள்.
என் மகள் கேட்ட அந்த வார்த்தையை எப்போதும் என்னால் மறக்க முடியாது “ அம்மா, இப்போது உங்களை நான் கட்டிப்பிடிக்கலாமா” என்று. ஆனந்த கண்ணீரோடு அரவணைத்தேன் அவளை. என் மகன் ஓடி வந்து என் மீது விழுந்து விளையாடினான். வேறென்ன வேண்டும் சொல்லுங்கள் நமக்கு. இதற்காகவாவது சீக்கிரம் மீள முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்காக உங்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சீக்கிரம் குணமடைவோம் என்ற நம்பிக்கை மட்டுமே உங்கள் மனதில் ஓடட்டும். தாயோ தந்தையோ ! பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளின் முத்தங்களை வாங்க தாமதிக்கலாமா! கொரோனாவிலிருந்து மீள்வோம்!
இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துக்கள்